கட்டுரை

அச்சு அசலான ஒரு கம்யூனிஸ்ட்

ஸ்ரீபதி பத்மநாபா

கேரளத்தில் ‘புன்னப்றா’ என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1946இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் ஊற்றுக்கண் இந்த ஊர்தான்.

புரட்சிக்குப் பெயர் பெற்ற அந்த புன்னப்றா கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் அச்சுதானந்தன். நான்கு வயதிலேயே தாயை இழந்தவர். பதினொன்று வயதில் தன் தந்தையையும் இழந்தார். தன் அத்தையின் பராமரிப்பில் வாழவேண்டி வந்ததால் ஏழாவது படிக்கும்போதே படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. ஒரு துணிக்கடையில் உதவியாளனாக வேலை பார்க்கத் துவங்கினார். பிறகு கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அப்போதுதான் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்கூடாகக் கண்டார்; அனுபவித்தார். டிரேட் யூனியன்களில் சேர்ந்து செயல்படத் துவங்கினார். 1940-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

தனது 23 வது வயதிலேயே புன்னப்றா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக இருந்தார். ஆயுதமேந்திய போராளிகளுக்கு அரசியல் அறிவையும் புகட்டும் பொறுப்பை அப்போதே கம்யூனிஸ்ட்

கட்சித் தலைமை அச்சுதானந்தனுக்கு அளித்திருந்தது. மூன்று வாலண்டியர் குழுக்களுக்குத் தலைமை வகித்தார் அவர். (ஒரு வாலண்டியர் குழு என்பது கிட்டத்தட்ட 400 பேர் கொண்டது.)

அப்போதைய திவான் சி.பி.ராமசாமி அய்யருக்கு பெரும் தலைவலியாக இருந்தார் அச்சுதானந்தன். 1946 அக்டோபர் 25. திருவிதாங்கூர் ராஜாவின் பிறந்த நாள். அன்று ஆலப்புழையிலிருந்து புன்னப்றாவுக்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகளை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 27 விவசாயிகள் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் போலீஸ் அவுட்போஸ்ட்டை முற்றுகையிட்டார்கள். ஒரு சப் இன்ஸ்பெக்டரும் பல காவலர்களும் கொல்லப்பட்டார்கள். கட்சிக் கட்டளைப்படி அச்சுதானந்தன் ஒளிந்து வாழ்ந்தார். அரச கட்டளையின்படி அச்சுதானந்தனை போலீஸ் கைது செய்தது. லாக்கப்பின் கம்பிகளுக்கிடையே அவரின் இரண்டு கால்களும் இழுத்து திருகப்பட்டன. லத்திகள் உள்ளங்கால்களைப் பதம் பார்த்தன. நினைவு இழக்கும் நிலையில் இருந்த அவரின் பாதங்களில் துப்பாக்கியின் பயனெட் ஆழ்ந்து சென்று பாதத்தைத் துளைத்து வெளிவந்தது. பாலாவிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் போடப்பட்டார். இப்போதும் அச்சுதானந்தனின் நடையில் அந்த துப்பாக்கி நுனியின் குத்தூசி அசைவுகளைப் பார்க்க முடியும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தலைவராய் அறியப்பட்ட பி. கிருஷ்ணப்பிள்ளைதான் அச்சுதானந்தனை கட்சி செயல்பாடுகளுக்கு அழைத்து வந்தவர். கிருஷ்ணப்பிள்ளையின் பாதையைப் பின் தொடர்ந்து போராட்டங்களுக்கு புதிய அடையாளங்களைத் தந்து மக்களின் ஆதரவைப் பெற்றார். கட்சிக்குள்ளேயே ஏ.கே.கோபாலனின் அரசியல் வாரிசு என்றும் அறியப்பட்டார்.

கட்சி செயல்பாடுகளில் முன்னேற்றப் பாதையிலேயே சென்றாலும் அவருடைய அரசியல் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகவே இருந்தது. முதன்முதலாக 1965ஆம் ஆண்டில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருடைய வீடு இருக்கிற அம்பலப்புழை தொகுதியிலேயே தோல்வியைக் கண்டார். பிறகு 67-லிலும் 70-லும் வெற்றி பெற்றாலும், மீண்டும் 77ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். பிறகு நீண்ட காலம் தேர்தல் களங்களிலிருந்து விலகியே இருந்தார். மீண்டும் 1991-இல் மாராரிக்குளத்திலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எல்லோரையும் அதிர்ச்சி அடையச் செய்தது, கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் அதே மாராரிக்குளத்தில் 1996-ஆம் ஆண்டு அச்சுதானந்தன் தோல்வியைத் தழுவியதுதான். பிறகு தன் மாவட்டமான ஆலப்புழாவில் போட்டியிடாமல் 2001-லும் 2006-லும் பாலக்காடு மலம்புழா தொகுதியில் நின்று சட்ட சபைக்குச் சென்றார்.

அத்தனை வருட கட்சி செயல்பாடுகளுக்குப் பிறகு 2006இல் தான் கட்சிக்குள் இருந்த கடும் போட்டிகளுக்கிடையே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளையும் தாண்டி, சில சமயங்களில் கட்சிக்கு எதிராகவே கூட, தனக்கு நியாயம் என்று தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்வதாலேயே கட்சிக்குள் பல எதிரிகளை சம்பாதித்தார். ஆனாலும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றார். அநீதிகளையும் ஊழல்களையும் கடுமையாக எதிர்க்கிற ஒரு தலைவராக சாதாரண மக்களின் தலைவராக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் நிறைய பேர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மிகக் கண்டிப்பான தலைவராகவே எப்போதும் அச்சுதானந்தன் இருந்திருக்கிறார். சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான அவருடைய போராட்டங்கள்தான் மக்களுக்கிடையே அவரை, தலைவராக கொண்டுசேர்த்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலங்களிலும் அவர் சக்தி மிகுந்த தலைவராகவே இருந்து வந்திருக்கிறார். எண்பதுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சிலர், முஸ்லீம் லீக்-உடன் கூட்டணி சேர்ந்து அதிகாரத்தைப் பிடிக்க முயற்சித்தபோது மிகவும் கறாராக எதிர்த்து, அவர்களைக் கட்சியிலிருந்தே வெளியேற்றும்படி செய்தவர் அவர். கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர எதிரியாக இருந்த கே.கருணாகரன் காங்கிரசிலிருந்து விலகி, ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியைத் துவங்கினார். அவருடன் கூட்டு சேரவும் சிலர் கட்சிக்குள் திட்டமிட்டபோது அச்சுதானந்தனின் தயவுதாட்சண்ய மில்லாத எதிர்ப்பால் பொலீட் பீரோவே அந்த கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுத்தது.

கட்சி எடுக்கும் நிலைப்பாடுகளில் தன்னால் ஆதரிக்க முடியாத விஷயங்களை எப்போதுமே வெளிப்படையாக பொதுவெளியிலேயே அறிவித்து விடுபவர் அவர். அதனால் கட்சி மேலிடத்திலிருந்தும் பல எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் பெற்றிருப்பவர். 

1962இல் இந்தியா - சீனா போரின் போது இந்திய ராணுவ வீரர்களுக்கு ரத்தம் கொடுக்கும் முகாமில் பங்கு பெற்றார் என்பதற்காக கட்சித் தலைமை அவரை கடுமையாகக் கண்டித்த வரலாறும் உண்டு.

இன்று தொண்ணூற்றிரண்டு வயதிலும் “தலை நரைப்பது அல்ல என் முதுமை; தலை நரைக்காதது அல்ல என் குழந்தைமை; புதிய துஷ்ட பிரபுத்துவத்தின் முன் தலை குனியாததுதான் என்றுமுள்ள என் இளமை” என்று தலை நிமிர்ந்து சொல்பவர் அவர். 1964இல் ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி, பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் இன்றும் நம்மிடையே இருப்பவர் வி.எஸ். மட்டுமே. அது மட்டுமல்லாது 1957-இல் உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளத்தில் ஏற்பட்டபோது மாநிலக் கமிட்டியில் உறுப்பினராக இருந்த 9 பேரில் இப்போதும் இருப்பவர் அவர் மட்டுமே.

போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்ற இந்தப் பெருமைகள்தான் இன்றளவும் அச்சுதானந்தனின் ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆயுதம். ஆனால் இந்தப் பழம்பெருமைகளும் அதனால் அவரிடம் காணப்படுகிற சர்வாதிகாரப் போக்கும்தான் அவருடைய எதிர்ப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கிற ஆயுதங்கள்.

வி.எஸ். தற்போது சொல்கிற கருத்துகள் எல்லாம் சமகால கேரள அரசியலில் எடுபடாத வெறும் வெத்துவேட்டுகள்தான் என்கிறது அவருடைய எதிர்ப்பாளர்களின் தரப்பு. எல்லா மேடைகளிலும் அவருடைய பாணியில் ‘உம்ம்ம்ம்மன்ன்ன் சாண்ண்ண்ண்டி...’ என்று ராகம் போட்டு பேசுவதால் மட்டுமே ஓட்டு விழாது. கேரள மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அவர் கண்டுகொள்வதில்லை. வயதாகிவிட்டதே என்கிற எண்ணமும் மற்றவர்கள் தன்னை ஒதுக்கிவைக்கிறார்கள் என்கிற வருத்தமும் அவர் மனதை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. 93 வயதிலும் நான் தான் கட்சியின் உச்சாணிக் கொம்பில் இருக்க வேண்டும், மற்றவர்கள் தன்னை அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதுதான் அவருடைய இரவு பகல் கனவாக இருக்கிறது. வயதானவர் என்கிற மரியாதையைக் கொடுக்கலாமே தவிர இன்றைய இளைஞர்களுக்கான புதிய கேரளத்தின் பிரச்சினைகளை ஆழமாக உணர்ந்து கொள்ள அவரால் முடியாது. இயற்கை அவருக்கு முதுமை என்கிற ஓய்வு காலத்தை அளித்திருக்கிறது. அதைக்கூட அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களின் துணையால் நடக்க முடியாமல் நடந்து என்ன சாதிக்கப் போகிறார்? புதியவர்களுக்கு வழிவிட்டு அவர் விலகி இருக்க வேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கட்சிக்குள் பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன்தான் அவர் எப்போதும் செயல்பட்டிருக்கிறார்.  சி.பி.எம் மில் முக்கிய சக்திகளாக இருந்த எம்.பி.ராகவன், கே.ஆர். கௌரியம்மா முதலானவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக இருந்தவர் வி.எஸ்.தான். அச்சுதானந்தன் இது வரை எந்த விஷயத்திலாவது உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறாரா? லாவலின் வழக்கு, ஐஸ்க்ரீம் பார்லர் வழக்கு, லாட்டரி மார்ட்டின் வழக்கு போன்ற வழக்குகளுக்கெல்லாம் இங்கிருப்பவர்களை நம்பாமல் வெளியிலிருந்து வழக்கறிஞர்களைக் கொண்டு வந்து அரசுக்கு 3 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதன்றி அவரால் வேறு என்ன லாபம்? கேரளத்தை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு திட்டத்தையும் முழு மனதோடு அவர் ஆதரித்தது கிடையாது. இவரை நம்பி இன்னும் கேரள ஆட்சியைக் கொடுத்தால் கேரளம் இன்னும் பின்னோக்கிய பாதையில்தானே செல்லும்?

இவையெல்லாம் அச்சுதானந்தனின் எதிர்ப்பாளர்கள் கூறுவது.

அவரோ, புதிய தலைமுறையினர், வாழ்க்கையின் கடினமான யதார்த்தத்தைக் கவனிக்காமல் விட்டேற்றியாய் நடக்கிறார்கள் என்கிறார். மிகுந்த சிரமப்பட்டாலும் மேடை மேடையாக ஏறி, ‘பருப்பில்ல்ல்லாத பருப்ப்ப்பு வடை... உளுந்தில்ல்ல்ல்லாத உளுந்ந்ந்ந்ந்து வடை தருகிறது இந்த உம்ம்ம்ம்ம்ம்மன் சாண்ண்ண்ண்டியின் ஆஆஆஆட்சி...’ என்று ராகம் போட்டு பேசியபடியே போராட்டச் சூளையில் வடித்தெடுத்த ஒரு அச்சு அசலான கம்யூனிஸ்ட்டாக கேரளத்தை வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஏப்ரல், 2016.